Published : 11 Nov 2022 08:12 PM
Last Updated : 11 Nov 2022 08:12 PM

UTS App மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வது மேலும் எளிதாகிறது: இந்திய ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: UTS App மூலம் ரயில் டிக்கெட் புக் செய்வதை இந்தியன் ரயில்வே மேலும் எளிதாக்கி இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய புறநகர் அல்லாத ரயில்களுக்கான பயண சீட்டினை UTS App மூலம் புக் செய்ய வேண்டுமானால், தற்போது ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால் மட்டுமே புக் செய்ய முடியும். இந்த சுற்றளவு தற்போது 20 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், முன்பதிவு செய்யாமல் பயணிக்கக்கூடிய புறநகர் ரயில்களுக்கான பயண சீட்டினை UTS App மூலம் புக் செய்ய வேண்டுமானால், தற்போது ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருந்தால் மட்டுமே புக் செய்ய முடியும். இந்த சுற்றளவு தற்போது 5 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இதற்கான அறிவுறுத்தலை ரயில்வே வாரியம் வழங்கி இருக்கிறது. ரயில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய புறநகர் ரயில்களுக்கான பயண சீட்டினை UTS App மூலம் புக் செய்ய தற்போது வழங்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவை விதிகளைப் பின்பற்றி 10 கிலோ மீட்டராக உயர்த்திக் கொள்வதற்கு ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்பதிவு செய்யாமல் பயணிக்கக் கூடிய ரயில்களில் பயணிப்பதற்கான பயணச் சீட்டு, மாதாந்திர பயணச் சீட்டு, ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் சீட்டு ஆகியவற்றை மொபைல் மூலம் புக் செய்ய இந்தியன் ரயில்வே UTS App எனும் செயலியை செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியை இலவசமாக தரவிறக்கம் செய்து ஆன்லைன் முறையில் பணம் செலுத்தி ரயில் பயணச் சீட்டுக்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x