

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பணியாற்றி வந்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மீது பாய்ந்தது. அந்த 11000 பேரில் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் அனேகா படேல். இவர் மகப்பேறு விடுப்பில் சென்றிருந்த நிலையில் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த அவர் மெட்டா நிறுவனத்தின் கம்யூனிகேஷன் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மெயில் செக் செய்து பார்த்த போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டுள்ளார். இது குறித்து லிங்க்டு இன் தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“நான் எனது படுக்கையில் இருந்தபடியே மெயிலை செக் செய்து கொண்டு இருந்தேன். அதே நேரத்தில் சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். நாங்கள் எல்லோரும் என்ன நடக்கும்? நாங்கள் பணியில் இருப்போமா? என்ற கேள்விகளுடன் மெயிலை செக் செய்து கொண்டு இருந்தோம். பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் அனைவருக்கும் ஆட்டோமேட்டட் மெயில் வந்து கொண்டிருந்தது. எனக்கும் அந்த மெயில் வந்தது. அதை பார்த்து எனது நெஞ்சம் நொறுங்கியது.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது பெருங்கனவு. சுமார் 2.5 ஆண்டுகள் அங்கு பணி செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. மறக்க முடியாத தருணங்கள் நெஞ்சில் நிறைந்துள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
அவரது மகப்பேறு விடுமுறை வரும் பிப்ரவரி மாதம் தான் நிறைவு பெற உள்ளது. இந்தச் சூழலில் அடுத்த வேலையை தேட வேண்டி உள்ளது குறித்தும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.