

நியூயார்க்: மெட்டா நிறுவனத்திற்காக தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அளித்த மக்களை நாம் இழக்கிறோம் என்று பணிநீக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms Inc) தமது பணியாளர்களில் 11,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இந்த நிலையில் பணியாளர்களை நீக்கியது தொடர்பாக, தனது நிறுவனத்தின் பணியாளர்களிடம் மார்க் ஸக்கர்பெர்க் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மார்க் ஸக்கர்பெர்க், “இது எனக்கு மிகுந்த உணர்வுபூர்வமான தருணம். நான்தான் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ. இதற்கு நான் முழுவதும் பொறுப்பேற்று கொள்கிறேன். பணிநீக்கம் செய்தது எனது அழைப்புதான். 18 வருடங்களாக இந்த நிறுவனத்தின் தலைவராக இதுவே எனது கடினமான முடிவு இருந்தது. இந்த நிறுவனத்திற்காக தங்களது இதயத்தையும் ஆன்மாவையும் அளித்த மக்களை நாம் இழக்கிறோம். கடந்த 18 வருடங்களாக ஃபேஸ்புக்கை வெற்றியடையச் செய்ததில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு” என்று உணர்வுபூர்வமாக பேசினார்.
பணிநீக்க நடவடிக்கை மூலம் மெட்டா தனது பணியாளர்களில் 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது. கடந்த 18 ஆண்டுகளில் ஃபேஸ்புக் செய்த மிகப் பெரிய பணிநீக்கமாக இது பார்க்கப்படுகிறது.