

புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மோசடிகள் தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே வரி நடைமுறையை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியது. பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை ஜிஎஸ்டி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன. இந்தக் கட்டமைப்பின் கீழும் வரி ஏய்ப்பு தொடர்ந்த நிலையில், மோசடிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொள்ளத் தொடங்கியது.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, போலி ரசீது உள்ளிட்ட ஜிஎஸ்டி மோசடிகள் தொடர்பாக 2020 நவம்பர் 9 அன்று நாடு தழுவிய நடவடிக்கையை ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பும் 22,300 போலி ஜிஎஸ்டி அடையாள எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த அக்டோபரில்ரூ.1.52 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இது 2-வது அதிகபட்ச வசூலாகும். கடந்த ஏப்ரல் மாதம் மிக உச்சமாக ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.