

மும்பை: வலுவான முகாந்திரம் உள்ளதால் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்தது செல்லுபடியாகும். எனவே, ஓய்வூதிய பலன்களை கோரி அவர் தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறோம் என மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்தபோது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டது. இதன் மூலம், அவரது கணவர் தீபக் கோச்சார் பலனடைந்ததாக புகார் எழுந்தது. ஐசிஐசிஐ வங்கி இதுதொடர்பாக கடந்த 2018 மே மாதத்தில் விசாரணையை தொடங்கியது. குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சந்தா கோச்சார் தாக்கல் செய்த மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.ஐ. சக்லா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உத்தரவில் தெரிவித்ததாவது: சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்ததற்கு போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது. அவரை பணியிலிருந்து நீக்கி வங்கி எடுத்த நடவடிக்கை செல்லுபடியானதே.எனவே, அவரது ஓய்வூதிய பலன்களைக் கோரிய இடைக்கால மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சந்தா கோச்சார் 2018-ல் வாங்கிய ஐசிஐசிஐ வங்கியின் 6.90 லட்சம் பங்குகளில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடாது. அது தொடர்பான பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால், ஆறு மாதங்களுக்குள் அதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சந்தா கோச்சார் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.