

புதுடெல்லி: விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ள ‘ஓயோ’ நிறுவனம் இந்தியாவுக்கு தனியாக சுற்றுலா வரும் பெண்களுக்கு உதவிடும் விதமாக அட்வென்சர் விமன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஓயோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2018-ஐ காட்டிலும் 2019-ம் ஆண்டில் பெண்களால் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் 63 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு உதவிடும் வகையில் ஓயோ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அட்வென்சர் விமன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வகையில் அந்த நிறுவனத்துடன் ஓயோ நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
‘அட்வென்சர் விமன் இந்தியா’வில் 25 முதல் 45 வயது வரையிலான 1.5 லட்சம் பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் இந்தியாவில் 21 நகரங்களிலும், மொரீஷியஸ் மற்றும் பூட்டான் நாடுகளிலும் தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை உடனிருந்து செய்து தருவர். ஓயோவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு தனியாக வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.