

புதுடெல்லி: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் சூரிய மின் உற்பத்தி காரணமாக இந்தியா தனது எரிபொருள் செலவில் ரூ.34,328 கோடியை மிச்சப்படுத்தி இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
எரிசக்தி மற்றும் தூய காற்று குறித்த ஆய்வு மையமான எம்பெர்-கிளைமெட் எனும் அமைப்பு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. சூரிய மின் உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன.
சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளே அந்த 5 நாடுகள். இவை மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் சூரிய மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் இந்த 7 நாடுகளும் சேர்த்து ரூ. 2.79 லட்சம் கோடிக்கு எரிபொருள் இறக்குமதியை தவிர்த்துள்ளன. மொத்த எரிபொருள் இறக்குமதியில் இது 9 சதவீதம்.
இந்த 6 மாத காலத்தில் எரிபொருளுக்கான செலவில் ரூ. 34,328 கோடியை இந்தியா மிச்சப்படுத்தி உள்ளது. 1.94 கோடி டன் நிலக்கரி, மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி காரணமாக எரிபொருள் செலவை அதிக அளவில் மிச்சப்படுத்தி உள்ள நாடு சீனா. இது தனது மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீதம் அளவுக்கு சூரிய மின் உற்பத்தியை கொண்டுள்ளது. இதன்மூலம் $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் சூரிய மின் உற்பத்தியில் ஜப்பான் சிறந்து விளங்குகிறது. இது இந்த 6 மாதத்தில், $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.