

உதகை: நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் மிக விரைவில் கட்டப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மினி டைடல் பார்க் அமைக்கத் தேவையான இடத்தை தேர்வு செய்ய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் உதகையில் உள்ள இடங்களை நேற்று ஆய்வு செய்தனர். உதகை ஹெச்.பி.எஃப் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடம், பட்பயரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலம், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
பின்னர் தமிழக விருந்தினர் மாளிகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் டைடல் பூங்கா மிக விரைவில் கட்டப்படும். எங்களுடைய பார்வையில் ஹெச்பிஎஃப் பகுதியில் 90 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடம் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறோம். நீலகிரியில் மாஸ்டர் பிளான் உள்ளதால், அதற்கு பிரத்யேகமாக வடிவமைப்பு தேவை. அதன்படி டைடல் பார்க் கட்டுமானங்கள் அமைக்கப்படும். டைடல் பார்க் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இங்கு, ரூ.100 கோடி அளவுக்கு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வாய்ப்புள்ளது.
ஐடி துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூட வர தயாராக உள்ளது. தமிழகத்தை நோக்கி ஐடி நிறுவனங்கள் வர விருப்பம் தெரிவித்துள்ளன. விழுப்புரம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. தொழில்துறையில் ஜிஎஸ்டிக்கு பிறகு தேக்க நிலை இருந்தது. கரோனா காரணமாக தொழில்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது. கரோனா காலகட்டத்திலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் உள்ளூர் உற்பத்தி 9% பங்களிப்புக்கு குறையாமல் இருந்தது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்த்துள்ளோம்.
தொழில்புரட்சி 4.0 மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிகு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துகிறோம். தமிழகத்தில் அதிகளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. பொறியாளர்கள், பாலிடெக்னிக் மாணவர்களின் திறன் மிக பெரிய அளவில் உள்ளது. அவர்களின் திறனை பயன்படுத்த தொழில்துறை, உயர்கல்வித்துறை மற்றும் எம்எஸ்எம்இ ஆகியவை ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உடனிருந்தனர்.