

ஈரோடு: தொடர் மழையால் ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே திங்கள் இரவு முதல் செவ்வாய் மதியம் வரை மொத்த ஜவுளி வியாபாரம் நடக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்த ஜவுளிக் கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருவதால், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு வியாபாரிகளின் வருகையும், விற்பனையும் குறைவாக இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: மழை காரணமாக தமிழக வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் ஜவுளி கொள்முதலுக்கு வரவில்லை. ஆந்திராவில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், மொத்த ஜவுளி விற்பனை 10 சதவீதமும், சில்லரை ஜவுளி விற்பனை 30 சதவீதமும் நடந்தது. தற்போது மழை மற்றும் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், கம்பளி மற்றும் ஸ்வெட்டர் ஆடைகள் விற்பனை அதிகமாக நடந்தது, என்றனர்.