

மும்பை: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2-ம் காலாண்டு அறிக்கை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. 2-ம் காலாண்டில் அந்நிறுவனத்தின் விற்பனை ரூ.4,380 கோடியாகவும், லாபம் ரூ.491 கோடியாகவும் உயர்ந்தன. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் அதன் விற்பனை ரூ.3,607 கோடியாகவும் லாபம் ரூ.382 கோடியாக இருந்தன.
இந்நிலையில் இந்த வாரத்தின் வர்த்தகத் தொடக்க நாளான திங்கள்கிழமை அன்று பிரிட்டானியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் அளவில் ஏற்றம் கண்டு, கடந்த ஓராண்டில் இல்லாத அளவில் ரூ.4,189- ஆக உச்சம் தொட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைத் தொட்டது.
கடந்த ஓராண்டாகவே பிரிட்டானியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கினர். இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்தது.