

புதுடெல்லி: இந்திய உற்பத்தி துறை தனது வளர்ச்சி வேகத்தை 6 முதல் 9 மாதங்கள் வரையில் தக்க வைக்கும் என இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) சமீபத்திய காலாண்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி கடந்த சில மாதங்களாகவே நல்ல அளவில் மேம்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தற்போதுள்ள சராசரி திறன் பயன்பாடு 70 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது. இது, நீட்டித்த பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த காலாண்டைக் காட்டிலும்எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 40 சதவீத நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்திய உற்பத்திதுறை தனது வளர்ச்சி வேகத்தை 6 முதல் 9 மாதங்கள் வரை தக்கவைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர்,கரோனா பாதிப்பு உள்ளிட்டவை பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இவைதவிர, மூலப் பொருள்கள் விலை உயர்வு, கடன் செலவினம் அதிகரிப்பு, செயல்பாட்டு மூலதன பற்றாக்குறை, சரக்கு கட்டண உயர்வு, உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையில் காணப்படும் மந்த நிலை உள்ளிட்டவை நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் காரணங்களாக மாறியுள்ளன.
இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த நிதியாண்டில் காணப்பட்ட மீட்சி நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளிலும் தொடர்கிறது. ஆய்வுக்குள்படுத்தப்பட்ட 61 சதவீத நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் அதிக உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு பிக்கி தெரிவித்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 61% நிறுவனங்கள் 2-வது காலாண்டில் அதிக உற்பத்தியை பதிவு செய்துள்ளன.