Published : 08 Nov 2022 07:45 AM
Last Updated : 08 Nov 2022 07:45 AM
பெய்ஜிங்: சீனாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, கரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை அறிவித்து தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சீனா முழுமையாக களம் இறங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை மத்திய சீனாவில்தான் உள்ளது. அங்கு கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதையடுத்து, அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் ஏராளமானோர் வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அண்மையில் வைரலாயின.
பாக்ஸ்கான் பணியாளர்களில் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் நடவடிக்கைகள் ஐபோன் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“மத்திய சீனாவின் செங்ஸோகு நகரத்தில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விநியோகம் முன்பு எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த புதிய தயாரிப்புகளைப் பெற நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்" என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாக்ஸ்கான் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘‘பேரிடர் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவரவும், கூடிய விரைவில் முழு அளவில் உற்பத்தியை தொடங்கவும் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்’’ என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT