

மும்பை: உத்தராகண்ட் மாநிலத்தில் 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மானா எனும் மலைக் கிராமம். இந்தியா - திபெத் எல்லையில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் இந்தியாவின் கடைசிக் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் கடைசி மூலைவரையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பான யுபிஐ சென்று சேர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் யுபிஐ க்யூஆர் கோர்டு அட்டை வைக்கப்பட்டிருப்பதைப் புகைப்படம் எடுத்து ‘இந்தியாவின் கடைசி டீக்கடை’ என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பின் வளர்ச்சியைப் பாராட்டியுள்ளார்.
“ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். இந்தப் புகைப்படம் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைக் கட்டமைப்பின் வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு இந்தியாவின் பணப்பரிவர்த்தனை நடைமுறை மிகப்பெரும் அளவில் மாற்றம் அடைந்தது. தற்போது இந்தியாவில் பெட்டிக்கடை முதல் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனை வரையில் யுபிஐ இன்றியமையாததாக மாறியுள்ளது. யுபிஐ கட்டமைப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.