ஏர் இந்தியாவுக்கு பங்குகள் முழுவதும் விற்பனை - இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது ஏர் ஏசியா
புதுடெல்லி: மலேசியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் 2014-ம் ஆண்டு ‘ஏர் ஏசியா இந்தியா’ என்ற பெயரில் விமான சேவையை தொடங்கியது.
அப்போது அந்நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகள் டாடா நிறுவனத்திடமும் 49 சதவீதப் பங்குகள் ஏர் ஏசியா நிறுவனத்திடமும் இருந்தன. அதன் பிறகு நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, ஏர் ஏசியா நிறுவனம் தனது பங்கை விற்கத் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் 83.67 சதவீதப் பங்குகள் டாடா நிறுவனம் வசம் வந்தன. 16.33 சதவீதப் பங்குகள் ஏர் ஏசியா தலைமை நிறுவனத்திடம் இருந்தன.
இந்நிலையில், ஏர் ஏசியா தலைமை நிறுவனம் தன் வசமுள்ள 16.33 சதவீதப் பங்குகளையும் ரூ.155.64 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விற்க முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம் ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது.
இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் தற்போது ஏர் ஏசியாவும் முழுமையாக டாடா நிறுவனத்தின் வசமாகிறது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் ஏர் ஏசியாவை ஒருங்கிணைத்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் விமான வர்த்தகத்தை மறுசீரமைப்பதன் ஒரு பகுதியாகவே இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும்” என தெரிவித்துள்ளது.
சந்தைப் பங்களிப்பு 5.7 சதவீதம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்பது ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒருஅங்கமாகும். குறைந்த கட்டண விமான சேவைக்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் விமான சேவை வழங்குவதில் ஏர் ஏசியா 5-வது மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. இதன் சந்தைப் பங்களிப்பு 5.7 சதவீதம் ஆகும். முதன்முதலாக வெளிநாட்டைச் சேர்ந்த ஏர்லைன்ஸ் ஒன்று இந்தியாவின் துணை நிறுவனமாக உருவெடுத்த பெருமை ஏர் ஏசியா நிறுவனத்தையே சாரும்.
