

புதுடெல்லி: ஜார்க்கண்டின் கிஸான்புரோ நிறுவனத்துக்கு சிறந்த அக்ரிடெக் ஸ்டார்ட்அப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) சார்பில் அக்ரிடெக் ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நவம்பர் 1, 2 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் 2-ம் நாளில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி, சிறப்பாக செயல்படும் அக்ரிடெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் கிஸான்புரோ நிறுவனத்துக்கு சிறந்த அக்ரிடெக் ஸ்டார்ட்அப் விருது வழங்கப்பட்டது.
ஜார்க்கண்டைச் சேர்ந்த கிஸான்புரோ நிறுவனம் 2020-ல் ஒரு இணையதளத்தை தொடங்கியது. வேளாண் உற்பத்தியை பெருக்குவது, வேளாண் செலவைக் குறைப்பது ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் இது வழிகாட்டுகிறது. விவசாய தொழிலுக்கு தேவையான தொழில்நுட்பம், வடிவமைப்பு, தகவல் அறிவியல் உள்ளிட்ட தகவல்களும் வழங்கப்படுகின்றன.