

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 60,609 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,000 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தின் காலை 09:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 184.72 புள்ளிகள் சரிந்து 60721.37 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 114.50 புள்ளிகள் சரிந்து 17968.35 ஆக இருந்தன.
உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கு, அமெரிக்க பெடரல் வங்கியின் அடிப்படை புள்ளிகளை (பிபிஎஸ்) 75 ஆக அறிவித்திருப்பது ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளை வெகுவாக பாதித்திருக்கின்றன. இதனால் வங்கி, நிதி, ஐடி பங்குகளின் குறியீடுகள் சரிவடைந்திருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, டாடா ஸ்டீல்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், எல் அண்ட் டி பங்குகள் உயர்வடைந்திருந்தன. எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்எஃப்டி, நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ போன்ற பங்குகள் சரிவில் இருந்தன.