Published : 03 Nov 2022 07:32 AM
Last Updated : 03 Nov 2022 07:32 AM
புதுடெல்லி: உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. வரும் 2030-க்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
‘ஏன் இது இந்தியாவின் சகாப்தம்’ என்ற தலைப்பில் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறை மற்றும் எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடும் மேம்பட்ட டிஜிட்டல் கட்டமைப்பும் இந்தியாவை 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக நிலைபெறச் செய்யும் என்று கூறியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியில் ஆதார் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பல்வேறு தயக்கங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இந்தியாவில் ஆதார் கட்டமைப்பு கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் நிதிப் பரிவர்த்தனையை ஆதார் எளிமைப்படுத்தியுள்ளது. ஆதார் கட்டமைப்பினாலேயே, சமூக நலத்திட்டங்கள் மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்புவது எளிமையானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில்...: சர்வதேச நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு வேலைகளை இந்தியாவிலிருந்து செய்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயரும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 2,278 டாலராக உள்ளது. 2031-ல் இது 5,242 டாலராகஉயரும். நாட்டின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 2031-ல் 21 சதவீதமாக உயரும். சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 4.5 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி 52,700 கோடி டாலராக (ரூ.43லட்சம் கோடி) உயரும். இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 65 கோடியிலிருந்து 96கோடியாக உயரும். ஆன்லைன்மூலம் பொருள்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை 25 கோடியிலிருந்து 70 கோடியாக உயரும். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்து 1.2 கோடியாக இருக்கும். இந்தியாவின் தனிநபர் வருவாய் உயர்வு, இளைஞர்களின் எண்ணிக்கை, தீவிர நகர்மயமாக்கல் ஆகியவை காரணமாகவும் 2030-ல் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இருக்கும்.
பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டிலிருந்து மாற்று எரிசக்தி பயன்பாட்டை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிற நிலையில் அடுத்தப் பத்து ஆண்டுகளில் எரிசக்தித் துறை சார்ந்து 70,000 கோடி டாலர் (ரூ.58லட்சம் கோடி) முதலீடு உருவாகவாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT