

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் குருகிராமில் கடந்த 1983-ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதலாவது ஆலையை அமைத்தது. இதில், முதலாவது மாடலாக மாருதி 800 கார் தயாரிக்கப்பட்டு தனிநபர் பயன்பாட்டில் அந்த கார் முதலிடத்தைப் பிடித்தது.
அதன்பின் மாருதி சுஸுகி நிறுவனம் 16 மாடல்களில் கார்களை தயாரித்து வருகிறது. குருகிராம் மற்றும் மானேசர் என மொத்தம் 2 ஆலைகளில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலைகள் ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
மாருதி சுஸுகி நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டேக்யூச்சி கூறுகையில், “ இந்திய மக்களுடன் சுஸுகி இணைந்து 2022 உடன் 40 ஆண்டுகளாகும் நிலையில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார் உற்பத்தி 2.5 கோடி மைல்கல்லை தாண்டியுள்ளது. இந்தசாதனை தருணத்தில் எங்களின்பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அவர்களின் ஆதரவினால்தான் லட்சக்கணக்கான மக்களின் சொந்த கார் கனவினை நனவாக்க மாருதி சுஸுகியால் சாத்தியமானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கார் விற்பனை சந்தையில் மாருதி சுஸுகி முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன.
இவைதவிர, மஹிந்திரா, கியா மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களும் கார்விற்பனையை அதிகரித்து கணிச மான சந்தைப் பங்களிப்பை கைப்பற்றி வருகின்றன.