Published : 02 Nov 2022 04:25 AM
Last Updated : 02 Nov 2022 04:25 AM

நவம்பர் மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைப்பு: தொழில் துறையினர் மகிழ்ச்சி

திருப்பூர்: நவம்பர் மாதத்துக்கான நூல் விலை கிலோ ரூ.20 குறைந்திருப்பது தொழில் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூலை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிக்கும் பணியில் தொழில் துறையினர் ஈடுபடுவர்.

நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நவம்பர் மாதத்துக்கான நூல் விலையில் கிலோவுக்கு ரூ.20-ஐ குறைத்து நூற்பாலைகள் அறிவித்துள்ளன. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24-ம் நம்பர் ரூ.285-க்கும், 30-ம் நம்பர் ரூ.295-க்கும், 34-ம் நம்பர் ரூ.315-க்கும், 40-ம் நம்பர் ரூ.335-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ம்நம்பர் ரூ.275-க்கும், 30-ம் நம்பர் ரூ.285-க்கும், 34-ம் நம்பர் ரூ.305-க்கும், 40-ம் நம்பர் ரூ.325-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) எம்.பி.முத்து ரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நூல் விலை குறைக்கப்பட்டதை வரவேற்கிறோம். தற்போது புதிய ஆர்டர்கள் கிடைக்கக்கூடிய சீசன் காலம் என்பதால், ஆர்டர் அதிகரிக்கும். நூல் விலை குறைந்திருப்பதன் மூலம், புதிய பல ஆர்டர்கள் உறுதி செய்யப்படும். நூல் விலை தொடர்ச்சியாக குறைந்தால் மட்டுமே, திருப்பூரில் தொழில் செய்யக்கூடிய சூழல் உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x