

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது அரசின் சிறப்பான முடிவு என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் முதலீடுகள் மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் உருவாகும். இதனால் பணவீக்கம் குறைவதுடன், பல நன்மைகளும் உருவாகும் என்று கூறியுள்ளார். இந்த சூழலில் என்னுடைய தனிப்பட்ட கருத்து ’இது சரியான நடவடிக்கை’ என்றார்.
சிங்கப்பூரில் செவ்வாயன்று நடைபெற்ற மிண்ட்ஏசியா சர்வதேச வங்கியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுப்பாராவ் இதைக் குறிப்பிட்டார்.
முக்கியமாக இது வங்கிகளுக்கும் நன்மை தரும் நடவடிக்கை. இதன் மூலம் மக்கள் ரூபாய் நோட்டுகளை செலவு செய்வதிலிருந்து விலக்கி, பணமல்லாத எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகளுக்கு ஊக்குவிக்க முடியும். இதன் மூலம் பண- பொருளாதாரத்திலிருந்து பணமல்லாத பொருளாதாரத்துக்குச் செல்ல முடியும். ஆனால் கறுப்பு பண பதுக்கலை கண்டறியும் நிதி மேலாண்மை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது முக்கியம் என்றும் வலியுறுத்தினார். கறுப்பு பணம் மீண்டும் பதுக்குவதை அனுமதிக்ககூடாது என்றார்.
எஸ்பிஐ வங்கியின் சார்பில் கலந்து கொண்ட அதன் நிர்வாக இயக்குநர் தினேஷ் காரா பேசுகையில், இந்த நடவடிக்கையால் குறுகிய காலத்துக்கு சிரமங்கள் இருக்கும், ஆனால் நீண்ட கால நோக்கில் நன்மைகளைக் கொண்டுவரும் முடிவு என்றார். தற்போதைய நிலைமைகளை சமாளிக்க ஏடிஎம் இயந்திரங்களை அதிகரித்துள்ளோம். தவிர விற்பனையகங்களில் டெபிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் கூறினார். பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் இறுதியில் கடன்களுக்கான வட்டி குறையும் என்று கூறினார். பிஎன்பி பரிபாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பேசும்போது அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கிறோம். என்று குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் இந்திய குடிமக்களும் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.