

கலிபோர்னியா: நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை விலைக்கு வாங்கினார். அதையெடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதில் இடம் பெற மறுத்தார்.ஆனால், அடுத்த சில நாட்களிலே அவர் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக அறிவித்தார். ஒரு பங்குக்கு 54.20 டாலர் விலை என்ற வீதத்தில் மொத்தமாக 44 பில்லியன் டாலர் தருவதாக அவர் கூறினார்.
ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ட்விட்டர் இயக்குநர் குழு நிறுவனத்தை எலான் மஸ்குக்கு விற்க ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான பரிவர்த்தனை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில், ட்விட்டர் நிறுவனம் சில தகவல்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்க எலான் மஸ்குக்குக் அமெரிக்க நீதிமன்றம் கெடுவிதித்தது.
இந்நிலையில், தற்போது எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கான காரணத்தை எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். “தற்போது சமூக வலைதளங்களில் வலதுசாரிகளும் இடதுசாரிகளும் வெறுப்பை வளர்த்து வருகின்றனர். சமூக வலைதள நிறுவனங்களும் இந்த வெறுப்புப் போக்கை ஊக்குவிக்கின்றன. அதன் மூலம்தான் பணம் வருவதாக அந்நிறுவனங்கள் நம்புகின்றன. இதன் காரணமாக ஆரோக்கியமான உரையாடலுக்கான தளம் இல்லாமல் போகிறது. எதிர்கால சந்ததியினர் வன்முறை இல்லாத ஆரோக்கியமான உரையாடலை நிகழ்த்த ஒரு தளம் அவசியம் என்பதை நான் உணர்ந்தேன். அதற்காகவே ட்விட்டரை வாங்கியுள்ளேன். நான்பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை. மனிதத்துக்கு உதவவே அதை வாங்கியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
ட்விட்டரை வாங்கியதைத் தொடர்ந்து எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
மேலும், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியினரான பராக்அகர்வால் ட்விட்டரின் சிஇஓ-வாகநியமிக்கப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி அவருக்கு 42 மில்லியன் டாலர் (ரூ.350 கோடி) இழப்பீடாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.