

திருப்பூர்: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு ஜவுளி இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:”பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய பருத்தி விலை உயர்வை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். பருத்திக்கு உண்டான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும். பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஏற்றுமதியை குறைக்க வேண்டும்.
நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிப்பதை கைவிட்டு, 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து மூலப் பொருட்களின் விலையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தொழிலாளர்களை மாதசம்பள அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். வங்க தேசத்தில் இருந்துஇந்தியாவுக்கு ஜவுளி இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்.
இந்தியாவின் ஜவுளிச்சந்தையை வங்கதேசம் ஆக்கிரமிக்கிறது. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் இந்திய ஜவுளிச்சந்தையில் பெரும் அபாயத்தை வங்கதேசம் ஏற்படுத்தும். இதனை தொழில் துறையினரும், மத்திய, மாநில அரசுகளும் உணர வேண்டும். திருப்பூரில் சிறு, குறு தொழில் செய்பவர்கள் 90 சதவீதத்தினர் உள்ளனர்.
அவர்களுக்கு மத்திய அரசு வங்கியின் மூலமாக, அவசரகால கடன் உதவி வழங்க முன் வர வேண்டும். கரோனா காலகட்டத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி, எளிமையான முறையில் மத்திய அரசு வழங்கிய நிதி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை. பின்னலாடைத் தொழிலுக்கு தனி வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு பின்னலாடை தொழிலை மேம்படுத்த ஐஏஎஸ் அந்தஸ்துடைய அதிகாரி தலைமையில் வளர்ச்சிக்குழுவை உருவாக்க வேண்டும். திருப்பூரில் நாங்கள் முழுக்க முழுக்க வடமாநில தொழிலாளர்களை நம்பியே உள்ளோம்.
எனவே அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் பின்னலாடைத் தொழிலை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சிறப்பு ஜவுளி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.