Published : 24 Oct 2022 11:35 AM
Last Updated : 24 Oct 2022 11:35 AM

தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை அமோகம்: 95% பட்டாசுகள் விற்று தீர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி

சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பட்டாசு விற்பனை கடையில் பட்டாசுகளை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்

சிவகாசி: சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே தமிழகம் முழுவதும் 95 சதவீதத்துக்கும் மேலான பட்டாசுகள் விற்று தீர்ந்ததால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகாசி பகுதிகளில் 1928-ம் ஆண்டு 4 ஆலைகளுடன் தொடங்கிய பட்டாசுத் தொழில், தற்போது ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வர்த்தகமாக விரிவடைந்துள்ளது.

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டாலும், முக்கிய பண்டிகைகள், திருவிழாக்களை வண்ண மயமாக்குவது சிவகாசி பட்டாசுகள்தான்.

நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீத்துக்கும் மேல் சிவகாசியில்தான் தயாராகிறது. இங்கு தொடக்க காலத்தில் பூச்சட்டி, சக்கரம், சாட்டை ரக பட்டாசுகள் தான் 100 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், தற்போது இரவில் பல வண்ணங்களில் ஒளிரும் பேன்சிரக பட்டாசுகள் 80 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் ஜனவரி முதல் ஜூலை வரை வடமாநில பண்டிகை மற்றும் விழாக்களை குறி வைத்து உற்பத்தி (ஆப் சீசன்) நடைபெறும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபரில் தீபாவளி சீசன் விற்பனைக்காக பிரத்தியேக பட்டாசு உற்பத்தி நடைபெறும். தீபாவளிக்காக புதிய பேன்சிரகப் பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு, சரவெடிக்குத் தடை, சுற்றுச்சூழல் விதிகள், சீனப் பட்டாசு வருகை, மூலப்பொருட்கள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், இந்த ஆண்டு வழக்கம்போல, பீகாக், மணி பிளான்ட், சூரிய உதயம், கரோனா, கிரிக்கெட் பந்து சக்கரம், டிரெயின், டின், பனை ஒலை, லாலி பாப், கைகளில் வைத்து வெடிக்கும் சக்கரம், பல நூறு அடி உயரம் வரை சென்று வெடிக்கும் பட்டாசு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சிவகாசியில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. ஆரம்பத்தில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தாலும், தீபாவளி நெருங்கும் வேளையில் விற்பனை களைகட்டியது. புதிய ரகங்களில் கிரிக்கெட் பந்து சக்கரம், பீகாக், டின் பட்டாசு, டிரெய்ன், அதிக உயரம் செல்லும் புஸ்வானம், கைகளில் சுற்றும் சக்கரம், வெடிக்கும்போது கை வைத்தால் சுடாத பட்டாசு ஆகியவை அதிக அளவு விற்பனை ஆனது. தமிழகம் முழுவதும் இருந்து வந்து இங்கு பட்டாசு கொள்முதல் செய்தனர்.

சென்னையில் ரூ.150 கோடி அளவுக்கும், தமிழகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், இளங்கோவன் கூறுகையில், ‘ சிவகாசி மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விற்பனையாளர்களிடம் இருந்த பட்டாசுகள் 95 சதவீதத்துக்கு மேல் விற்று விட்டன. சீனப் பட்டாசுகளுக்கு தடையால், கடந்த ஆண்டுகளை விட சிறப்பான அளவில் பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளது.' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x