Published : 24 Oct 2022 04:30 AM
Last Updated : 24 Oct 2022 04:30 AM

தீபாவளி | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவினில் 18 டன் இனிப்பு உற்பத்தி: ரூ.1 கோடியை தாண்டிய விற்பனை

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உற்பத்தி நிலையத்தில் தீபாவளிக்காக 18 டன் இனிப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. இங்கு முதல் முறையாக, ஒரு மாதத்தில் 18 டன் அளவுக்கு இனிப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பால்கோவா பல வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் குடிசைத் தொழிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பால்கோவா உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆவின் உற்பத்தி நிலையத்தில் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள 150 ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு கடந்த ஆண்டுகளில் தீபாவளிக்காக 10 டன் வரை இனிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு, விருதுநகர் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விற்பனையை அதிகரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பொதுமேலாளர் சதீஷ் உத்தரவில், பல்வேறு பிரிவுகளில் உள்ள 57 பணியாளர்கள், கடந்த ஒரு மாதமாக சிறப்பு உற்பத்தியில் ஈடுபட்டனர்.

இதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு பால்கோவா, மைசூர்பாகு, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, பாதுஷா, லட்டு, காஜூ கத்லி உள்ளிட்ட 11 வகையான இனிப்புகள் என மொத்தம் 18 டன் இனிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது குறித்து விற்பனை மேலாளர் ராகுல் கூறுகையில், ‘இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக 18 டன் இனிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டு, 11 டன் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 6 நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் 150 ஆவின் பாலகங்கள் மூலம் 7 டன் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த ஆண்டு தீபாவளி வர்த்தகம் ரூ.1 கோடியைக் கடந்துள்ளது.' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x