

கொல்கத்தா: வெளிநாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடைபெற்றுவருகிறது. இந்த வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தற்போது மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கென்று வெளிநாட்டு வங்கிகளுடன் சிறப்பு கணக்குகள் தொடங்குமாறு இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த காஸ்ப்ரோம்பேங் இந்தியபொதுத்துறை வங்கியான யூகோவங்கியில் சிறப்பு ரூபாய் கணக்கைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து யூகோ வங்கியின்சிஇஓ சோம சங்கர் கூறுகையில், “யூகோ வங்கியில் காஸ்ப்ரோம் பேங் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவது தொடர்பானஅனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துவிட்டன. தற்போதுஇந்த வோஸ்ட்ரோ கணக்கு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.
டாலரில் வர்த்தகம் செய்துவருவதால், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இது தவிர்த்து,அமெரிக்காவால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான்உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல்நிறைந்ததாக உள்ளது.
இந்தப் போக்கை மாற்றி அமைக்கும் பொருட்டு, மத்தியஅரசு ஏற்றுமதி - இறக்குமதிதொடர்பான பணப்பரிவர்த்த னையை ரூபாயிலேயே மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்திய வங்கிகள்வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் ரூபாயிலே வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான காஸ்ப்ரோம்பேங் இந்திய பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்கியுள்ளது.
வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை டாலருக்குப் பதிலாக ரூபாயிலே செலுத்தலாம். அதேபோல் ஏற்றுமதியாளர் கள் அவர்களுக்குரிய தொகையை எதிர்நாட்டிலிருந்து ரூபாயிலே பெற்றுகொள்ள முடியும்.