

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி வர்த்தக நாளான இன்று மாலை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 104 புள்ளிகள் (0.18 சதவீதம்) உயர்ந்து 59,307 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 12 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 17,576 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலையில் சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வுடன் 59,381.36 ஆக தொடங்கிய வர்த்தகம், 388 புள்ளிகள் வரை உயர்வு கண்டு 59,590.93 என இருந்தது. பின்னர், அது சரிவை நோக்கிச் சென்றது. இதற்கு, உலகளாவிய மந்தப்போக்கு, லாபமான பங்குகளை வாங்குதல் போன்றவையே காரணம்.
இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 104.25 புள்ளிகள் உயர்ந்து 59307.15 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.35 புள்ளிகள் உயர்ந்து 17576.30 ஆக இருந்தது.
உலகளாவிய மந்தமான சந்தைபோக்கு, உக்ரைன் விகாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை போன்ற காரணிகளால் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குவர்த்தகம் வார இறுதி நாள் வர்த்தகத்தில் ஒரு நிலையற்றத் தன்மையுடனேயே நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் பேங்க் பங்குகள் 9.5 சதவீதம் உயர்ந்திருந்தன. அதேபோல, ஹெச்யுஎல், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் பேங்க், எஸ்பிஐ லைஃப், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மறுபுறம் பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் 3.4 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தன. பஜாஜ் ஃபைனான்ஸ், டிவிஸ் லேப்ஸ், அதான் போர்ட்ஸ், யுபிஎல், ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சியை சந்தித்திருந்தன.