

மும்பை: இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது சென்சென்ஸ் 96 புள்ளிகள் உயர்ந்து 59,203 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,564 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் நேற்று (அக்.20) வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 95.71 புள்ளிகள் உயர்ந்து 59202.90 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 51.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17563.95 ஆக இருந்தது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. இன்று காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 289.50 புள்ளிகள் உயர்ந்து 59492.40 ஆக இருந்தது. அதேவேளையில், நிஃப்டி 71.35 புள்ளிகள் உயர்ந்து 17635.30 ஆக இருந்தது.
சர்வதேச பங்குச்சந்தைகளில் பாதகமான போக்கு நிலவிய போதிலும், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் வலுவான வருவாய் அறிக்கைகள் காரணமாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே தொடங்கின.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 7 சதவீத அளவில் உயர்ந்திருந்தது. அதேபோல, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.