

புதுடெல்லி: மேக் மை டிரிப், கோஐபிபோ, ஓயோ ஆகிய நிறுவனங்களின் நியாயமற்ற வணிக நடைமுறைகள் காரணமாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) ரூ.392 கோடி அபராதம் விதித்துள்ளது.
மேக் மை டிரிப், கோஐபிபோ தளங்கள் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு, விடுதிகள் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றன. அதேபோல் ஓயோ நிறுவனம் விடுதி முன்பதிவு சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனங்கள் நாடு முழுவதும் பல்வேறு விடுதிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் நியாயமற்று இருப்பதாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேக் மை டிரிப் மற்றும் கோஐபிபோ நிறுவனங்களுக்கு ரூ.223.48 கோடியும், ஓயோ நிறுவனத்துக்கு ரூ.168.88 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.
மேக் மை டிரிப்–கோஐபிபோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள விடுதிகள் வேறு நிறுவனங்களின் தளத்தில் பங்கேற்கக் கூடாது என்றும் அந்த விடுதிகள் தங்கள் சொந்தத் தளத்தில் கூட அறை வாடகையை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப குறைத்துக்கொள்ளக் கூடாது என்றும் நிர்பந்திக்கப்படுகின்றன. மேலும், மேக் மை டிரிப் நிறுவனமானது ஓயோ நிறுவனத்துக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கிவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறைந்தன.
இந்த ஒப்பந்தங்கள் தொழில் போட்டி விதிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாக இந்திய விடுதிகள் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு புகார் அளித்தது. இதையடுத்து, இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
கூகுளுக்கு அபராதம்: இதுபோல, ஆண்ட்ராய்டு மொபைல் சாதன அமைப்பில் பல்வேறு சந்தைகளில் தனது ஆதிக்க நிலையை கூகுள் நிறுவனம் தவறாக பயன்படுத்தியுள்ளது. இந்தியாவில் போட்டிக்கான நடைமுறைகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதையடுத்து கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.