

மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் 83.12 என்றளவில் உள்ளது.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் 6 காசுகள் சரிந்து 83.12 என்றளவிற்கு இறங்கியது. கடந்த 8 நாட்களாக 82 முதல் 82.70 வரை ஊசலாடிக் கொண்டிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 83.08 என்றளவிற்கு இறங்கியது. 83க்கும் கீழ் ரூபாய் மதிப்பு சரிவதே இதுவே முதன்முறை.
ரூபாய் மதிப்பு குறித்து அண்மையில் பேசிய நிர்மலா சீதாராமன், "இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே சொல்வேன். ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டாலர் வலுப்பெறும் சூழல் உலகளவில் மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உறுதியாக இருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில் மற்ற எல்லா நாணயங்களையும் விட சந்தை மாற்றங்களை இந்திய ரூபாய் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில் அண்மையில் ஒரு நேர்காணலில் இது குறித்து அதிபர் ஜோ பைடன் பேசுகையில், “நமது பொருளாதாரம் வலிமையாக உள்ளது. பணவீக்கம் உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவைவிட பிற இடங்களில் பணவீக்கம் மோசமாக உள்ளது. மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் சரியான கொள்கை இல்லை என்பதே பிரச்சினைக்குக் காரணம். டாலரின் மதிப்பு உயர்வதை நினைத்து நான் கவனம் கொள்ளவில்லை. ஆனால் பிற நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருவதைக் கண்டு கவலை கொண்டுள்ளேன்" என்று கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
பிரிட்டனின் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத பணவீக்கம் 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. இதனால் அங்கு கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை சரி செய்ய பெரும் செல்வந்தர்களின் வரிகளை குறைக்கும் பிரிட்டன் பிரதமரின் யோசனையும் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளது.