Published : 18 Oct 2022 04:05 AM
Last Updated : 18 Oct 2022 04:05 AM
கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேர் விமான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
கோவை விமானநிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்தில் தினமும் சராசரியாக 23 அல்லது 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை விமானநிலைய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், புனே, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானத்தில் வியட்நாமுக்கு இணைப்பு முறையில் விமான சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 9,69,185 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 78,232 பேர் என மொத்தம் 10,47,417 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 2,93,456 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 9,973 பேர் என மொத்தம் 3,03,429 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,95,338 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 15,782 பேர் என மொத்தம் 2,11,120 பேர் பயணித்துள்ளனர்.
கரோனா தொற்று பரவலுக்கு பின் மாதந்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமானநிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT