தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.1,650 குறைந்தது: காரணம் என்ன?

தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.1,650 குறைந்தது: காரணம் என்ன?
Updated on
1 min read

ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,650 குறைந்துள்ளது. இதனால் தீபாவளிக்கு நகை விற்பனை அதிகரிக்கும் என நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு சவரன் (8 கிராம்) சுமார் ரூ.39,000 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 10-ம் தேதி ரூ.39,056-க்கு விற்ற நிலையில், கடந்த இரு நாட்களாக ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,656 குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: தீபாவளியின்போது தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் விலை குறைந்து வருகிறது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாக ரஷ்யாவின் கரன்சியை வாங்க பல உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தன்னிடம் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை அதிகளவு உலக மார்க்கெட்டில் விற்பனை செய்து ரஷ்யா தனது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இதுவே விலை குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் இந்தியாவில் குறைந்தளவே விலை குறைப்பு காணப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதே இதற்கு காரணம். இல்லையெனில் இன்றைய சூழலில் ஒரு சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்திருக்க வேண்டும். வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது கடைசி மூன்று நாட்களில் தங்க நகைகள் விற்பனை அதிகரிக்கும். கோவையில் தினமும் 200 கிலோ தங்க நகை விற்பனை செய்யப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முறையே 70, 80 சதவீதம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பண்டிகைக்கு முந்தைய மூன்று நாட்கள் தினமும் 210 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in