

வெளிநாட்டு ஏலக்காய் இறக்குமதி குறைந்ததால், இந்திய ஏலக் காய்களுக்கு மவுசு அதிகரித்து கிலோ ரூ.1,500-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி, கோம்பை, தேவாரம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கேரளாவில் தங்கி கம்பம் மெட்டு, போடிமெட்டு, வண்டல் மேடு, தேவிகுளம், சூரியநல்லி, அடிமாலி, ராஜக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொந்த மாகவும், தோட்ட உரிமையாளர் களிடம் குத்தகைக்கு நிலம் வாங்கியும் 2,000 ஏக்கருக்கு மேல் ஏலக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் சாகு படி செய்யப்படும் ஏலக்காய்களை இந்திய நறுமண வாரியம் (ஸ்பைசஸ் போர்டு) மூலம், ஏலம் முறையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக போடி, வண்டல்மேடு, சாந்தம்பாறை ஆகிய இடங்களில், இந்திய நறுமண வாரியத்தின் கீழ் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது வெளிநாட்டில் இருந்து ஏலக்காய்கள் இறக்குமதி குறைந்துவிட்டதால், இந்திய ஏலக்காய்களுக்கு மவுசு அதி கரித்து விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏலக்காய் விவசாயிகள் சிலர் கூறியதாவது: இந்திய ஏலக்காய் கள் நறுமணம் அதிகமாக இருப்பதால், உலக சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த ஆண்டு மத்திய அரசு இறக்குமதி வரிச் சலுகையை அதிகரித்துள்ளதால், இந்திய ஏலக்காய் விலை சரியத் தொடங்கியது. அப்போது விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.500 ஆக சரிந்தது. தற்போது இறக்குமதி குறைந்ததால் இந்திய ஏலக்காய்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தரத்துக்கேற்ப கிலோ ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விலை போகிறது. இதனால் ஏலக்காய் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.