

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது அனைத்துக் கிளை கள் மற்றும் ஏடிஎம்களில் ரூ.100 நோட்டுகள் அதிகம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு செல்லாது என அறிவித்துவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக 100 ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக வங்கி தெரிவித் துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் 5 வங்கிகள் துணை வங்கிகளாக உள்ளன. இவற்றுக்கு 55 ஆயிரம் ஏடிஎம்கள், 7 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் (சிடிஎம்) உள்ளன. எஸ்பிஐ-க்கு மட்டும் நாடு முழுவதும் 17 ஆயிரம் கிளைகள் உள்ளன.
அடுத்த இரண்டு நாள்களுக்கு அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் போதிய அளவுக்கு 100 ரூபாய் நோட்டுகள் இருக்கும் விதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தவிர, எஸ்பிஐ 3,000 பிஓஎஸ் இயந்திரங்களைச் செயல் படுத்த உள்ளது. இவற்றில் வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க முடியும்.