

சான் பிரான்சிஸ்கோ: பயனர்களுக்கு மலிவு விலையில் விளம்பரங்களுடன் கூடிய கட்டண சந்தாவை அறிமுகம் செய்துள்ளது பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ். இது நிச்சயம் அதன் பயனர்களை சந்தா நோக்கி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தாதாரர்களை தொடர்ச்சியாக இழந்து வந்த நிலையில் இந்த புதிய சந்தாவை நெட்ஃப்ளிக்ஸ் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், உலகம் முழுவதும் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெப் சீரிஸ், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மாதிரியான கன்டென்டுகளை ஸ்ட்ரீம் செய்து வருகிறது. கடந்த 1997 முதல் இந்நிறுவனம் இந்தச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் வாக்கில் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதன் சந்தாதாரர்களை பெருமளவு இழந்தது.
நூறு நாட்களில் சுமார் 2 லட்சம் சந்தாதாரர்களை நெட்ஃப்ளிக்ஸ் அப்போது இழந்ததாக சொல்லப்பட்டது. இந்த புதிய சந்தா திட்டத்தின் விலை ரூ.600 மதிப்பில் இருக்கும் என தெரிகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கன்டென்டுகளை பார்க்கும் போது 15 முதல் 30 நொடிகள் வரையில் விளம்பரங்கள் ஸ்ட்ரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் பயனரின் பயன்பாட்டின் அடிப்படையில் அவர்களது தேடலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பேஸிக் வித் ஆட்ஸ் என்ற சந்தாவின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸிக், ஸ்டேண்டர்ட் மற்றும் ப்ரீமியம் ஆகிய சந்தாக்களை வழங்கி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.
இதன் அம்சங்கள் என்னென்ன?
இந்தியாவில் எப்போது? அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி இந்த சந்தா அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.