

டெல்லி: இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல். அதனை நிறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதன் அன்று செல்போன் உற்பத்தியாளர்களை சந்தித்து இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முற்றிலும் 5ஜி போன் விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் சொல்லியுள்ளதாக தகவல்.
மேலும், அமைச்சக அதிகாரிகள் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அந்த சேவைக்கான சப்போர்ட் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் 5ஜி சாதனங்களில் 5ஜி சேவைக்கான சப்போர்ட் கிடைக்காத நிலையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மாற்று ஏர்டெல் சார்பில் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தரவுகளின் படி இந்தியாவில் மொத்தம் 750 மில்லியன் மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். அதில் சுமார் 350 மில்லியன் பயனர்கள் 3ஜி அல்லது 4ஜி சேவை உள்ள போன்களை பயன்படுத்தி வருகின்றனர். 100 மில்லியன் பயனர்கள் 5ஜி ரெடி போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 5ஜி சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.