

புதுடெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன் புரூகிங்ஸ் மையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
உரம் மற்றும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து, உலகின் சில பகுதிகளில் அவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இருப்பினும், விவசாயிகளை அவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் உலகம் கடுமையான உணவு பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளது.
இந்தியா கடந்த ஆண்டில் மட்டும் 10 மடங்கு அதிகமாக விலை கொடுத்து உரங்களை இறக்குமதி செய்தது. இந்தியாவில் சிறிய விவசாயிகளின் எண்ணிக்கையே அதிகம். எனவே, அவர்களுக்கு குறைந்த விலையில் உரங்களை கிடைக்கச் செய்வது அவசியம். சிறிய விவசாயிகளிடம் இறக்குமதி செலவினத்தை காரணம் காட்டி உரங்களின் விலையை அதிகரிக்க முடியாது.
சர்வதேச சந்தையில் உரங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் 2018, 2019,2020-ம்ஆண்டுகளில் விவசாயிகள் உரங்களுக்கு என்ன விலை கொடுத்தார்களோ அதே விலையில்தான் தற்போதும் அவர்கள் உரங்களை வாங்குகின்றனர். விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேவைப்படும் இடங்களில் வட்டி மானியமும் அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதே அரசின் முதன்மையான நோக்கமாக இருக்கும். கரோனா பேரிடரிலிருந்து மீண்டு வரும் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2019-20-ம் நிதியாண்டில் உரங்களுக்காக மானியம் வழங்க பட்ஜெட்டில் ரூ.81,125 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அதற்கான ஒதுக்கீடு ரூ.2,15,222 கோடியாக அதிகரித்துள்ளதாக உரத்துறையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி தர மதிப்பீட்டு நிறுவனமான கேர்எட்ஜ் தெரிவித்துள்ளது.
16-ம் தேதி வரை பயணம்
அமெரிக்காவில் அக்டோபர் 16 வரையில் அலுவல்பூர்வமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிர்மலா சீதாராமன், ஐஎம்ஃப், உலக வங்கி ஆண்டு கூட்டம், ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் (எஃப்எம்சிபிஜி) கூட்டங்களில் பங்கேற்கிறார்.
நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூஸிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரீஷியஸ், யுஏஇ, ஈரான், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.