இந்தியாவில் டெலிகாம் சேவையை வழங்க உள்ளதா அதானி குழுமம்?

அதானி குழும தலைவர் கெளதம் அதானி.
அதானி குழும தலைவர் கெளதம் அதானி.
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கில் அதானி குழுமம் உரிமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான அதானி குழுமம், இதுவரை தொலைத்தொடர்பு சேவையில் இறங்வில்லை. அந்த குழுமம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கு பெற்றது. ரூ.212 கோடியில் 20 ஆண்டுகளுக்கு 400MHz அலைக்கற்றையை 26GHz மில்லிமீட்டர் வேவ் பேண்டில் பயன்படுத்துவதற்கான உரிமத்தை ஏலம் மூலம் பெற்றுள்ளது. எனினும், தங்களது விமான நிலையம் மற்றும் துறைமுக தேவைகளுக்காக இதனை பயன்படுத்த உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கில் அதானி குழுமம் கடந்த திங்கள் கிழமை உரிமம் பெற்றுள்ளதாக 2 அரசு தரப்பு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அதானி குழுமம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ரீடெயில் முறையில் டெலிகாம் சேவையை வழங்க அந்த குழுமம் முடிவு செய்தால் அது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது. முன்னதாக, தங்கள் நிறுவனத்தின் தேவைக்காக தனியாக 5ஜி நெட்வொர்க் அமைக்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

இப்போதைக்கு அதானி குழுமம் ஆந்திரா, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழகம் மற்றும் மும்பை என வெறும் ஆறு வட்டத்தில் மட்டுமே உரிமம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நெட்வொர்க் இணைப்பின் மூலம் தொலைதூர அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மற்றும் இணைய சேவை கிடைக்கும் எனவும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in