

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையில் ரூ.7.45 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் வசூலா னதைவிட 16.3 சதவீதம் அதிகம்.
நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் மொத்தமாக ரூ.8.98 லட்சம் கோடி நேரடி வரி வசூலானது. இதில் ரூ.1.53 லட்சம் கோடி ரீபண்டாக அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நிகர நேரடி வரி வசூல் ரூ.7.45 லட்சம் கோடியாக உள்ளது. இது மத்திய அரசு 2022-2023 நிதி ஆண்டில் திட்டமிட்ட வரி வசூல் இலக்கில் 52.46 சதவீதம் ஆகும். கார்ப்பரேட், தனிநபர் வருமான வரி உள்ளிட்டவை நேரடி வரிகளின் கீழ் வருபவை. கார்ப்பரேட் வருமான வரி சென்ற நிதி ஆண்டில் இதே கால கட்டத்தில் வசூலானதைவிட 16.29 சதவீதமும் தனிநபர் வருமான வரி 17.35 சதவீதமும் கூடுதலாக வசூலாகி உள்ளது.