

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஓட்டல்கள் உட்பட பல வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி கோரி டெல்லி அரசின் தொழிலாளர் நலத் துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தன. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு அத்துறையில் நிலவும் ஊழலே முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் ஓட்டல்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படும் திட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி வழங்கியுள்ளார். இது குறித்து தொழிலாளர் நலத்துறை ஒரு வாரத்துக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படக் கூடாது எனவும் துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் டெல்லியில் ஓட்டல்கள், சிறு உணவகங்கள், ஆன்லைன் டெலிவரி சேவைகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், சரக்கு போக்குவரத்து உட்பட பல வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் தற்போது மதுபான விநியோகத்துக்கு நள்ளிரவு 1 மணி வரை அனுமதி உள்ளது. ஆனால், 24 மணி நேர அனுமதியில், மதுபான விநியோக நேரம் நீட்டிக்கப்படவில்லை.
இந்த அனுமதியின் மூலம் டெல்லியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. துணைநிலை ஆளுநரின் இந்த முடிவு டெல்லியில் ‘இரவு வாழ்க்கைக்கு’ உத்வேகம் அளித்துள்ளது. 24 மணி நேர வர்த்தக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து தொழிலாளர் நலத் துறையோ அல்லது ஆம் ஆத்மி கட்சியோ எந்த பதிலும் அளிக்கவில்லை.