விசா கட்டுப்பாடு அச்சத்தில் இந்திய நிறுவனங்கள்

விசா கட்டுப்பாடு அச்சத்தில் இந்திய நிறுவனங்கள்
Updated on
1 min read

அமெரிக்காவில் ஹெச் 1 பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என்கிற பயத்தினால் இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்கள் எடுப்பதை வேகப்படுத்தி வருகின்றன. அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி நிர்வாகத்துக்கு வந்த பிறகு, அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் வளாக நேர்காணல் மூலம் பணியாளர்களை தேர்வு செய்வதை அதிகப்படுத்தியுள்ளன. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் 15,000 கோடி டாலர் மதிப்பு கொண்ட சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் நீண்டகாலமாகவே ஹெச் 1 பி விசா மூலம் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களில் மட்டும் 2005 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 86,000 ஹெச் 1 பி விசா பணியாளர்கள் உள்ளனர். ஹெச் 1 பி விசாவை அதிக அளவில் அனுமதிப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்சினை கிளம்பி வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் இந்த விவகாரத்தை கையிலெடுத்தார் என்பது முக்கியமானது. இன்போசிஸ் நிறுவனம் சமீபத்தில் 500 முதல் 700 புதிய பணியாளர்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பாவிலிருந்து பணியமர்த்தியுள்ளது. இதில் சுமார் 80 சதவீத பணியாளர் உள்ளூர் பணியாளர்கள். இவர்களுக்கு பயிற்சி அளித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும். இதனால் எங்களது செலவுகள் அதிகரிக்கும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பிரவீண் ராவ் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in