

புதுடெல்லி: டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இ-நாணயம் அறிமுகம் பக்கபலமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் இ-நாணயத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும். மேலும், நிதி ஒருங்கிணப்பு சேவை மற்றும் பணப்பட்டுவாடா முறைகளை திறமையாக கையாளவும் இந்த அறிமுகம் மிக பயனுள்ளதாக அமையும்.
இ-நாணயம் எனப்படும் டிஜிட்டல் கரன்ஸி தொடர்பான கருத்துருக்கள் வரவேற்கப்பட்டன. குறிப்பாக, தொழில்நுட்பம், வடிவமைப்பு தேர்வுகள், டிஜிட்டல் ரூபாய்க்கான சாத்தியமான பயன்பாடுகள் மற்றும் வழங்கல் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறுமுக்கிய அடிப்படை அம்சங்கள்குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, டிஜிட்டல் நாணயம் என்பது நாணயக் கொள்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயம். இது மத்திய வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் ஒரு பொறுப்பாக இருக்கும்.
டிஜிட்டல் நாணயமானது அனைத்து குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் பணம் செலுத்தும் ஊடகமாகவும், சட்டப்பூர்வ டெண்டராகவும், மதிப்புள்ள பாதுகாப்பான சேமிப்பகமாகவும் கருதப்பட வேண்டும்.
வங்கிக் கணக்குவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பரிவர்த்தனைகளுக்கான செலவை டிஜிட்டல் கரன்ஸி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வருவதால், உலக அளவில் மத்திய வங்கிகள் இப்போது மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு வடிவ நாணயத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், குறிப்பிட்ட சிலபயன்பாடுகளுக்காக டிஜிட்டல்கரன்ஸியை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.