சென்னை உட்பட 8 நகரத்தில் 5ஜி சேவை - சிம் கார்டு மாற்றத் தேவையில்லை; ஏர்டெல் அறிவிப்பு

ஏர்டெல்
ஏர்டெல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் சென்னை உட்பட 8 முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியது. இதற்காக, சிம் கார்டு மாற்றத் தேவையில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் கூறியிருப்பதாவது:

5ஜி சேவையை முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி ஆகிய 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளோம். 5ஜி இணைப்புக்கான கட்டமைப்புகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு பிற நகரங்களிலும் இந்த சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும்.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 5ஜி அதிவேக இணைய சேவை அனுபவத்தை 4ஜி சிம் கார்டு வழியாக தற்போதுள்ள திட்டத்தின் மூலமாகவே பெறலாம். இதற்காக, கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. முழு அளவில் விரிவுபடுத்தும் வரை இந்த சலுகை தொடரும்.

தற்போதுள்ள 4ஜியின் இணையதள வேகத்தை காட்டிலும் 5ஜி சேவையின் வேகம் 20 முதல் 30 மடங்கு வரை அதிகமாக இருக்கும். இவ்வாறு ஏர்டெல் தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியிருப்பதாவது:

இந்திய தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் புரட்சிகளை ஏற்படுத்துவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்க 5 ஜி சேவை அறிமுகப்படுத்துகிறோம்.

5ஜி ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் தற்போதைய சிம் வழியாகவே இந்த சேவையினை பெற்று மகிழலாம். இந்தியாவின் பொருளாதார சேவைகள், கல்வி, சுகாதாரம், உற்பத்தி, வேளாண்மை மற்றும் சரக்குப் போக்குவரத்தில் 5ஜி சேவை மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையில் களமிறங்கியுள்ள நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் நோக்கில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை தொடங்கவுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவை 2023 ஆகஸ்ட் 15-லிருந்து அறிமுகப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்தங்கிய ஜியோ

அக்டோபர் 5-ம் தேதி முதல் 5ஜி சேவையை தொடங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ, 4 நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் சென்னை உட்பட 8 நகரங்களிலும் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in