

சென்னை: ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு அதிகரித்து வரும் பணவீக்கம், நாணயங்களில் அதிகஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களே காரணம் என, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டுஆணையத்தின் (ஃபியோ) தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு அதிகரித்து வரும் பணவீக்கம், நாணயங்களில் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை காரணங்களாக உள்ளன. உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைத் தடுக்கும் நோக்கில், பொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் சில ஏற்றுமதிகள் மீதான கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி எண்ணிக்கையை பாதித்துள்ளன. பொறியியல் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஜவுளித்துறைகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிக்கிறது, ஏனெனில், இந்தத் துறைகள் மிகப் பெரிய வேலைவாய்ப்புக்கு முக்கியமாகும்.
அதேசமயம், எலக்ட்ரானிக் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் நீடித்த வளர்ச்சி இருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும். புவிசார் அரசியல் நிலைமை கடுமையாக மேம்படும் வரை, வரவிருக்கும் சில மாதங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும். நிலக்கரி, வாகன உதிரிபாகங்களின் இறக்குமதி அதிகரித்துள்ள போதிலும், ஒட்டுமொத்த பொருட்களின் இறக்குமதி குறைந்து வருகிறது. ஏற்றுமதி சரக்கு மீதான ஐஜிஎஸ்டி விலக்கு, கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, சரக்குக் கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளதால், ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். ஏற்றுமதித் துறையின் கோரிக்கையை அரசு கவனிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.