

பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பின் கருத்து தெரிவிக்காமல் இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தினசரி அடிப்படையில் ஒவ்வொரு நிகழ்வையும் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. மேலும் மக்களின் நியாயமான துன்பங்களை எளிதாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற்றதால் வங்கிகளில் டெபாசிட் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி ரொக்க கையிருப்பு விகிதத்தை தற்காலிகமாக அதிகரித்திருக்கிறது.
தற்போது அச்சகங்கள் புதிய 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கிவிட்டன. மக்கள் பணத்திற்கு பதிலாக டெபிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலட்களை பயன்படுத்த வேண்டும். இது நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு பலனைத் தரும். மேலும் வர்த்தகர்கள் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களையும் பயன்படுத்துவதற்கு வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு நாளும் வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி தொடர்பு கொண்டு வருகிறது. நிலைமை சீராக குறைந்துவருவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. ஏடிஎம் மற்றும் வங்கிகிளைகளில் வரிசைகள் குறைந்துள்ளன. தினசரி தேவைப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.