

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.1.47 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இது சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலானதைவிட 26% அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வசூலான ரூ.1.47 லட்சம் கோடியில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து ரூ.31,880 கோடி மத்திய கணக்குக்கும் ரூ.27,403 கோடி மாநில கணக்குகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பகிர்ந்தளிப்புக்குப் பிறகு மொத்த மத்திய ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பர் மாதத்தில் ரூ.57,151 கோடியாகவும் மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.59,216 கோடியாகவும் உள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் ரூ.8.93 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. இது சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 32 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த ஏழு மாதங்களாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில், பண்டிகை நாட்கள் வருவதால் மக்களின் நுகர்வு அதிகரிக்கும். இதனால், ஜிஎஸ்டி வசூல் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.