

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்திய செல்லுலர் ஆப்ரேட்டர்கள் சங்கம் இணைந்து நடத்தும் ‘இந்திய மொபைல் காங்கிரஸ்’ மாநாடு இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 4-ம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து 5ஜி சேவையை யும் தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும். 5ஜி சேவையானது இந்தியாவில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்; இந்திய சமூக மாற்றத்துக்கான விசையாக அது இருக்கும்; ‘டிஜிட்டல் இந்தியா’ இலக்கை முன்னெடுத்துச் சென்று இந்தியாவின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும். 2035-ல் 5ஜி மூலமான பொருளாதார வளர்ச்சி 450 பில்லியன் டாலராக (ரூ.36.45 லட்சம் கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4ஜியை விட பத்து மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படும் 5ஜியானது இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் மிகப்பெரும் மாற்றத்தை 5ஜி கொண்டுவரும் என்றும் மெட்டாவர்ஸ் உருவாக்கத்தில் 5ஜியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது.
மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளன.