

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடி ஆணை பிறப்பித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் மீது அமலாக்கப்பிரிவினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லை யாவுக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், அவர் இதுவரை நேரில் ஆஜராக வில்லை. இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணையை பிறப்பித்தது.
மேலும், கடந்த 2012-ல் காசோலை மோசடி தொடர் பான வழக்கிலும் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடி ஆணை பிறப்பித்த நீதிமன்றம், "மல்லையாவுக்கு இந்நாட்டின் சட்டத்தின் மீது துளியும் மதிப்பு இல்லை. நாடு திரும்ப தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாலேயே தன்னால் நாடு திரும்ப முடியவில்லை என்று அவர் கூறுவது வஞ்சகம். சட்ட நடவடிக்கைகளை அவர் துஷ்பிரயோகம் செய்கிறார்" என நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையா தனது வெளிநாட்டு சொத்து விவரங்களை ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 25-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிட்டன் நிறுவனமான டியாஜியோவிலிருந்து விஜய் மல்லையா பெற்ற 40 மில்லியன் டாலருக்கான விவரங் களை அளிக்காதது ஏன் என்று அப்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.
“எங்களது ஏப்ரல் 7-ம் தேதி உத்தரவின்படி முழு விவரம் அளிக்கப்படவில்லை (விஜய் மல்லையா). அதாவது ஒட்டுமொத்த சொத்து விவரமும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம், குறிப்பாக 40 மில்லியன் டாலர்கள் குறித்த விவரங்களையும் அளிக்க உத்தரவிட்டிருந்தோம் ஆனால் தெரிவிக்கப்படவில்லை என்று அறிகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த 40 மில்லியன் டாலர்கள் உட்பட அனைத்து அயல்நாட்டு சொத்து விவரங்களையும் மல்லையா தெரிவிக்க 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் அடுத்த விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.