

புதுடெல்லி: டைம் இதழ் வெளியிட்டுள்ள வளரும் இளம் தொழிலதிபருக்கான உலக 100 கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவிலிருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள இளம் தலைமுறையைச் சேர்ந்த முதல் 100 கோடீஸ்வர்களின் பட்டியலை டைம் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டில், இந்தியாவிலிருந்து ஆகாஷ் அம்பானி மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர், அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டப்படிப்பை முடித்தவர். வாரிசு அடிப்படையில் நிறுவனப் பதவிகளைப் பெற்றாலும் குழும தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அவர் கடுமையாக உழைத்து வருவதாக டைம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக கடந்த ஜூன் மாதம் ஆகாஷ் பதவி உயர்வு பெற்றார். இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 42.60 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடமிருந்து பல கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்ததில் ஆகாஷின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அஸோர்ட் ஆடையகம் திறப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சில்லறை வர்த்தகப் பிரிவான ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் 'அஸோர்ட்' எனும் பெயரில் ப்ரீமியம் ஆடை விற்பனை மையத்தை பெங்களூருவில் முதல் முறையாக திறந்துள்ளது. இதற்கு முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பொறுப்பாளராக இருப்பார்.
இந்தியாவில் ஆடை விற்பனை சந்தை மிகப்பெரியது. அதில் கணிசமான பங்கை கைப்பற்றும் வகையில் ரிலையன்ஸ் ரீடெயில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது மேங்கோ, ஸரா நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.