

சென்னை: தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை கொள்கைகள் சார்ந்து அரசுக்கு பரிந்துரைகளை முன்வைத்து வரும் தனியார் அமைப்பான மெட்ராஸ் வர்த்தகம் மற்றும் தொழில் சபை (எம்சிசிஐ) நேற்று தனது 186-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில் எம்சிசிஐ அமைப்பின் தலைவர் கேசவன், துணைத் தலைவர் ராம்குமார் சங்கர், காக்னிசன்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் லக்ஷ்மி நாராயணன், எழுத்தாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் எம்சிசிஐ-யின் பங்களிப்பு குறித்தும், மாநிலத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி சார்ந்து தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்தும் எம்சிசிஐ தலைவர் கேசவன் பேசினார்.
எம்சிசிஐ-யின் பங்களிப்பு குறித்து அவர் கூறுகையில், “1836-ம் ஆண்டு 18 உறுப்பினர்களோடு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் மெட்ராஸ் வர்த்தகம் மற்றும் தொழில் சபை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் எம்சிசிஐ தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.
தமிழகம் முன்னோடி
தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டிய துறைகள் குறித்து அவர் பேசுகையில், “இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதேசமயம், கால மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தற்போது மின்வாகன தயாரிப்பை நோக்கி உலகம் தீவிரமாக நகர்ந்து வருகிறது.
உலகின் போக்குக்கு ஏற்ப மின்வாகன தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாடு ஜவுளித் துறையில் சிறப்பான இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் வேலை உருவாக்கத்தில் ஜவுளித் துறை முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்டு, ஜவுளித் துறையில் நீடித்த வளர்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அது அந்நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், சுற்றுலா துறை சார்ந்து அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை பின்தங்கி இருக்கிறது. இங்குள்ள சுற்றுலாத் தளங்களை பிரபலப்படுத்தி வருவாயைப் பெருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
சமூகப் பங்களிப்பு வழங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் எம்சிசிஐ 2018-ம் ஆண்டு முதல் சிஎஸ்ஆர் விருதுகளை வழங்குகிறது. இவ்வாண்டுக்கான விருதுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்டோபர் 10-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று எம்சிசிஐ தெரிவித்துள்ளது.