

புதுடெல்லி: கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவதை இவ்வாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் வரைவு அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விதி 2023 அக்டோபருக்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “உலக அளவில் விநியோக நெருக்கடி நிலவுவதால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு 8 பேர் அமரும் வசதிகொண்ட கார்களில் 6 ஏர்பேக்குகள் பொருத்துவதை 2023 ஆண்டு அக்டோபர் முதல் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “வாகனத்தின் விலை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த வாகனம் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை” என்று கூறினார்.